தனது பாட்டியுடன் வசித்த 15 மாத குழந்தையொன்று பாட்டி இறந்த பின் சுமார் ஒரு வார காலம் உணவு எதுவுமின்றி தனி யாக உயிர்ப் பிழைத்துள்ளது.
பிறையர் ரோஸ் இனெய்சென் எனும் இக்குழந்தையின் 28 வயதான தாயார் ட்ரேஸி இனெய்சென், குற்றமொன்றுக்காக சிறையிலடைக்கப்பட்டுள்ளார்.
இதனால் இக்குழந்தை தனது பாட்டியுடன் வசித்துவந்தது.
தனது தாயாருடன் தொலைபேசியில் உரையாடுவதன் மூலம் தனது தாய் மற்றும் குழந்தையின் நிலையை ட்ரேஸி அறிந்துவந்தார்.
ஆனால், நவம்பர் 7 ஆம் திகதியிலிருந்து ட்ரேஸியின் தொலைபேசி அழைப்புக்கு தாயார் பதிலளிக்காத நிலையில், தனது காதலர் அந்தனி வால்டோவை அழைத்த ட்ரேஸி, தனது வீட்டுக்குச் சென்று பார்க்குமாறு கோரினாராம்.
இதையடுத்து, கடந்த 14 ஆம் திகதி ட்ரேஸியின் வீட்டுக்கு அந்தனி வால்டோ சென்றபோது அவ்வீட்டின் வெளிப்புறக்கதவு தாழிட்டிருந்தது.
ஆனால், உட்புற கதவொன்று திறந்திருப்பதை ஜன்னலுக்கூடாக அவதானித்தார். குழந்தையொன்று தனியாக அழுதுகொண்டு இருப்பதையும் அவர் அறிந்தார்.
அதன்பின் பொலிஸார் வரவழைக்கப்பட்டு வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது ட்ரேஸியின் தாயார் குளியலறையில் இறந்து கிடந்தார்.
அவர் நோய் காரணமாக இயற்கையாக இறந்துள்ளதாக கூறப்படுகிறது.
ட்ரேஸின் குழந்தை அழுக்கான நிலையில், உதடுகள் வீங்கிய நிலையில் காணப்பட்டது.
தற்போது அக்குழந்தை வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகிறது.

0 comments:
Post a Comment